சென்னை போக்குவரத்து நெரிசல் – ஓர் ஆய்வு

சென்னை போக்குவரத்து நெரிசல் – ஓர் ஆய்வு

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில் சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாகிக்கொண்டே போகிறது. எந்த அளவிற்கென்றால், இரவு எட்டு மணிக்கு பெருங்களத்தூரிலிருந்து சொந்த ஊர் செல்ல பேருந்து முன்பதிவு செய்துவிட்டு பேருந்து வரும் வரும் என மணிக்கணக்கில் காத்திருந்து பேருந்து பெருங்களத்தூருக்கு வரவே நான்கு முதல் ஆறு மணிநேரம் வரை தாமதமாகும் அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அரசும், பயணிகளின் வசதிக்காக வெளியூர்களில் ஓடும் பேருந்துகளை பெரும்பாலும் சென்னையிலிருந்து வெளியூருக்குச் செல்லும் வழித்தடங்களில் சிறப்புப்பேருந்துகளாக மாற்றிவிடுகிறார்கள். நெரிசலை குறைக்க பேருந்துகள் புறப்படும் இடங்களை பிரித்து விடுகிறார்கள். எனினும் பேருந்துக்காக காத்திருக்கும் கூட்டம் சற்றும் குறைந்தபாடில்லை. சென்னையிலிருந்து வெளியூருக்கு செல்லும் ஒவ்வொரு பேருந்தும் நிரம்பி வழிந்துக்கொண்டு தான் செல்கின்றன. பேருந்துகளை அதிகரிக்க அதிகரிக்க போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக்கொண்டே தான் செல்லும். இதற்கு மாற்று வழிகளை செயல்படுத்தினாலொழிய ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக்கொண்டு தான் செல்லும்.

முதலில் பேருந்துகளை நம்பும் அரசு, ரயில்களை நோக்கி தன் கவனத்தை செலுத்த வேண்டும். பண்டிகை சிறப்பு ரயில்களை இயக்குகின்றதென்றாலும் ஒன்றிரண்டு ரயில்கள் மட்டுமே கூடுதலாக இயக்கப்படுகிறன. குறைந்தது திருச்சி வரையிலுமாவது இரண்டு மணிநேரத்திற்கு ஓர் முன்பதிவற்ற பயணிகள் ரயிலை தொடர்ந்து இந்நாட்களில் இயக்க வேண்டும். ஓர் ரயிலில் நேரிசலில்லாமல் ஏற்றி சென்றாலும் கூட குறைந்தது இருபது பேருந்துகளினுடைய பயணிகளை ஓர் ரயில் ஏற்றிச்சென்று விடும். இங்கே பயணிகள் கூட்டம் குறைந்ததென்று இதை பார்ப்பதை விட சாலையிலிருந்து இருபது பேருந்துகள் அப்புறப்படுத்தப்பட்டன என்று பார்த்தால் ஒவ்வொரு ரயிலும் கணிசமான அளவிற்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க வல்லது. இது ஒரு ரயிலின் சராசரி நெரிசலற்ற கொள்ளளவு. மேலும் சென்னை மாநகருக்குள் மின்சார ரயில்கள் தொடர்ந்து ஓடுவது போல் மணிக்கு ஒரு மின்சார ரயிலை விழுப்புரம் வரை ஓடச்செய்யலாம் (இது பண்டிகை காலம் மட்டுமன்றி வருடம் முழுதுமே கூட நடைமுறைப்படுத்த தகுந்த திட்டம் தான். குறைந்தது பண்டிகை காலங்களில் மட்டுமாவது செயல்படுத்த அரசு ஆவன செய்ய வேண்டும்.)

இதுவே சென்னையின் பண்டிகைக்கால போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக முடியும். ஆனால் வருடம் முழுவதும் சென்னை, மும்பை, பெங்களுரு போன்ற பெருநகரங்களில் ஒவ்வொரு நாளும் இருக்கக்கூடிய போக்குவரத்து நெரிசலுக்கும் அதனால் ஏற்படும் காலவிரயம், எரிபொருள் விரயம் மற்றும் அதனால் ஏற்படும் இழப்பு, இதற்கெல்லாம் தீர்வு பரவலாக்கம் (Decentralization) மட்டுமே.
எதற்காக புதிதாக திறக்கப்படும் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும், பெருந்திட்டங்களும், வளர்ச்சியும் ஓரிடத்தில் குவிய வேண்டும்? ஒட்டுமொத்த மாநிலமும்/நாடும் வளர்வது தான் வளர்ச்சியாக இருக்க முடியும். நகரங்களில் வேகமாகவும் பிற இடங்களில் மிகவும் மந்தமாகவும் இருக்கும் வளர்ச்சியும் அதற்கிடையில் ஏற்படும் இடைவெளியை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே தான் செல்லும். இது முடிவில்லாமல் தொடர்ந்துக்கொண்டே செல்லும். அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், திடக்கழிவு மேலாண்மை பிரச்சனைகள் என பட்டியல் காலப்போக்கில் மேலும் நீளும்.

நகரங்களை நோக்கி மக்கள் படையெடுக்க முதற்காரணம் வேலைவாய்ப்பு. இங்கு புதிதாக சென்னைக்கோ மும்பைக்கோ இன்னபிற பெருநகரங்களுக்கோ ஒருவர் குடிபெயர்ந்தால் அதற்கு பெரும்பாலும் வேலை தேடுதலும், கிடைத்த வேலை அங்கு தான் இருத்தலும் தான் காரணமாக அமைகிறது. எதற்காக பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவங்கள் பெருநகரங்களில் குவிகின்றன? எதற்காக பெருநகரங்களில் மட்டுமே இந்த நிறுவனங்கள் இருக்க வேண்டும்? அரசு ஒரு நிறுவனத்திற்கு அனுமதி அளிப்பதற்கு முன் அதே தொழில்துறையில் அந்த பகுதியில் கணிசமான அளவிற்கு அந்த தொழில்துறை பங்களித்துக்கொண்டிருந்தால் அந்த பகுதியில் மேலும் அதே தொழில்துறையில் முதலீடுகளும் நிறுவனங்களும் குவிவதை தடுத்து அங்கு அதன் பிறகு அனுமதி வழங்குவதை தடை செய்ய வேண்டும். கடலூரிலோ கரூரிலோ குமரியிலோ அந்த தொழில்துறையில் ஏற்கெனவே முதலீடுகளும் நிறுவங்களின் பங்களிப்பும் எங்கு குறைவாக இருக்கிறதோ அங்கு அந்த நிறுவனங்களை துவங்க வலியுறுத்த வேண்டும். இன்போசிஸ் நிறுவனமோ டாடா நிறுவனமோ சென்னையிலிருந்து தான் அவர்களின் தொழிலை செய்ய வேண்டுமென்றோ அங்கு தான் தகுதி வாய்ந்த மக்கள் இருப்பார்கள் என்றோ ஒன்றுமில்லை. அவர்கள் சிவகங்கையில் நிறுவனத்தை தொடங்கினாலும் சரி, தர்மபுரியில் தொடங்கினாலும் சரி, இளைஞர் படை சென்னைக்கு குடிபெயர்வது போல் நிச்சயம் அங்கும் குடிபெயரும். குடிபெயர்வது மட்டுமன்றி அந்தந்த பகுதிகளும் வளர்ச்சியடையும். மக்களின் வரிப்பணம் பெரும்பாலும் நகரங்களின் திட்டங்களுக்கு செல்வது குறைந்து அனைத்து பகுதிகளிலும் அரசின் செலவீனம் பகிர்ந்தளிக்க முடியும். இது தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு மட்டுமன்றி எல்லா துறைக்கும் பொருந்தும். புதிதாக ஓர் அரசு கல்லூரியோ நிறுவனமோ துவங்கும்போது ஏற்கனவே அந்த துறையில் முன்னேறியுள்ள ஓரிடத்தை தான் தேர்ந்தெடுக்கின்றனர். அதற்கு மாறாக அந்த துறையில் பின்தங்கிய மாவட்டத்தில் அத்திட்டத்தை தொடங்கினால் வேலைவாய்ப்பும் வளர்ச்சியும் ஓரிடத்தில் குவியாமலும், பின்தங்கிய பகுதிகள் மேலும் பின்தங்கிவிடாமலும் தடுக்கும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களோ, கல்வி நிறுவனங்களோ அன்றி ஒரு இடுபொருள் (raw material) சார்ந்த நிறுவனங்கள் அந்த இடுபொருள் எங்கு அதிகம் மற்றும் எளிதாக கிடைக்கிறதோ அங்கு அமைவது இயல்பு. அப்படிப்பட்ட நிறுவனங்களை தவிர்த்து பிற நிறுவனங்கள் அனைத்திற்கும் இவ்வாறான அடிப்படையில் மட்டுமே அரசு அனுமதி வழங்க வேண்டும். ஆனால், அப்படி பார்க்கையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருநகரங்களில் குவிவதிலும் அவ்வாறான காரணங்கள் இருக்கிறது. அவர்களுக்கான இடுபொருள் (raw material) நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமான பல தேவைகளை நகரங்கள் உருவாக்கிக்கொடுக்கின்றன. உதாரணத்திற்கு விமானப்போக்குவரத்து, சொகுசு விடுதிகள் போன்றவை காரணங்களாக அமையும்பொழுது அவர்கள் நிச்சயம் நகரங்களிலேயே தான் குவிவர். ஆனால் அவர்கள் ஒரு பின்தங்கிய மாவட்டத்தில் குவிந்தாலுமே அவ்வாறான சாதகமான சூழல்கள் தன்னிச்சையாக அங்கேயும் அமையும். புதுக்கோட்டையிலோ விருதுநகரிலோ இவ்வாறான நிறுவனங்களின் குவிதல் நடந்தாலும் அங்கும் விமான போக்குவரத்து வசதியில் தொடங்கி அனைத்து சாதகமான சூழலும் தன்னிச்சையாக அமையும். ஆனால் நம் நிறுவனங்கள் தானாக ஒருபோதும் இதை சாத்தியப்படுத்தமாட்டார்கள். அவர்களுக்கு எவ்வளவு எளிதாக வேலை முடியுமோ அவ்வளவு எளிதான ரெடிமேட் சூழல்கள் தான் தேவை. இதை சாத்தியப்படுத்த அரசு சட்டங்களும் கட்டுப்பாடுகளுமன்றி வேறு வழியில்லை.

இவ்வகையில் செய்தால் ஒவ்வொரு தொழில்துறையிலும் ஒவ்வொரு மாவட்டங்களின் பங்களிப்பும் வளர்வது மட்டுமன்றி இவ்வாறான விடுமுறை காலங்களில் மக்கள் சொந்த ஊர் செல்ல அல்லல்படுவதும் குறைக்க முடியும். வாகன ஓட்டிகளும் இவ்வாறான பெரும் போக்குவரத்து நெரிசலிலிருந்து நிம்மதியடைவர். மேலும் வேலைவாய்ப்பில் தொடங்கி, அரசின் செலவீனம், வளர்ச்சி மற்றும் மக்கள் குடிபெயர்வது வரை அனைத்தும் எல்லா பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். வளர்ச்சியில் கிராமங்கள் பின்தங்குதலும் நகரங்கள் அசுர வேகத்தில் வளர்வதும் குறையும்.

இன்று நம் சமூகத்தில் இருக்கும் பொருளாதார ரீதியில் நிலவும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இது நேரடியாகவோ மறைமுகமாகவோ தீர்வாக அமையும். தனிமனித சமூகநீதி பற்றி பேசும் நாம் பொருளாதார ரீதியான புவியியல் சார்ந்த வளர்ச்சியிலும் இவ்வாறான சமூக நீதியின் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும்.

மேலும் மாநில அரசு ரயில்வே துறையை நன்கு உபயோகித்துக்கொள்ள வேண்டும். அதன் பின்புலத்தில் ஆயிரக்கணக்கானோரின் உழைப்பு அடங்கியுள்ளது.

இப்பதிவு நான் நேற்று அலுவலகம் முடிந்து வீடு செல்லும் வழியில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலின் போது தோன்றிய கருத்துக்களை வைத்து தொகுக்கப்பட்டது. விமர்சனங்களும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மேலும் இப்பதிவை நீங்கள் ஆதரித்தால் தங்கள் நண்பர்களுடன் பகிரவும். நன்றி. இப்படிக்கு சென்னை டிராஃப்பிக்கால் பாதிக்கப்பட்ட ஒருவன்!

படம்: விக்கிபீடியா

Advertisements